நத்தம் அருகே மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

நத்தம் அருகே மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
X

நத்தம் அருகே மின்வெட்டை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுப்பாக பார்க்கலாம்

நத்தம் அருகே முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின் தடையைக்கண்டித்து சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் மேலமேட்டுபட்டி கிராம் உள்ளது. இந்த கிராமத்தில் 550-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர். இந்தநிலையில் இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதன் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் கூறி மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் இரவு திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவிஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், பூபதி மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் யூசுப் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நத்தம் அருகே பெரியமலையூர், சின்ன மலையூர், வலசை உள்ளிட்ட மலை கிராமங்களில் அலைபேசி டவர் அமைக்க பூமி பூஜை:

நத்தம் அருகே பெரியமலையூர், சின்ன மலையூர், வலசை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.அலைபேசி டவர் இல்லாததால் மக்கள் தகவல் தொடர்பில் பின்தங்கிய நிலையில் இருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று பெரியமலையூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பி.எஸ்.என்.எல்., டவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி எம்.பி., தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், தாசில்தார் ராமையா,வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, பத்மாவதி, ஊராட்சி தலைவர் அழகம்மாள் மணி முன்னிலை வகித்தனர். மேலும் வலசு பகுதியில் புதிய ரேஷன் கடையையும் எம். பி. திறந்து வைத்தார். மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, திமுக பிரதிநிதி வலசை பெரியசாமி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

நத்தத்தில் குவாரி நடத்த கருத்துக் கேட்பு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா நடுமண்டலம் கிராமத்தில் சர்வே எண் 569/1 பாகம் 4-ல் ஹெக்டேர் 1.20.0 நிலப்பரப்பில் ரஃப் ஸ்டோன் குவாரி நடத்துவதற்கான பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் புதன்கிழமை நடந்தது. இதற்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட மாசு கட்டுபாடு வாரிய நிர்வாக பொறியாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.வந்திருந்த அனைவரையும் மாசு கட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் ஜெயா வரவேற்றார்.

கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது கிராம வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பலரும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்த போது திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

பின்பு அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சு நடத்தி இருவரையும் அமைதியாக இருக்க வைத்து அவரவர் கருத்துகளை பேச வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர்களும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர் கல்குவாரிக்கு, எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகளை பதிவு செய்தனர்.அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

இதில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பழனியம்மாள் மகாலிங்கம், வேலம்பட்டி ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நடுமண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, விவசாயிகள், பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ஸ்டாலின், வி.சி.க. கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்முகம்,நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட செயலர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பொதுமக் களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட திமுக பொருளாளர் விஜயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆண்டி அம்பலம், பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றியச் செயலாளர்கள் பழனிசாமி, ரத்தினக் குமார், நகரச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மக்களவை உறுப்பினர் வேலுசாமி பேசியதாவது: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பொதுமக்களிடமிருந்து சம்பந்தப் பட்ட கோரிக்கைகளை அலுவலர்கள் பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு பெறுவது தொடர்பாக நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு அலுவலர்கள் துண்டு பிரசுரம் விநியோகித்து அறிவிப்பு செய்ய வேண்டும் என்றார்.

இதில், வட்டாட்சியர் ராமையா, ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பத்மாவதி, தலைமை நில அளவையர் ஜீவன் உள்பட வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!