திண்டுக்கல் மாவட்டத்தில் மழை: கூலித்தொழிலாளியின் வீடு இடிந்து சேதம்
நத்தம் அருகே மழையால் இடிந்த விழுந்த கூலித்தொழிலாளியின் வீடு.
நத்தம் அருகே கனமழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. நல் வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மிதமான மழை பரவலாக பெய்தது. இதில் நத்தம் அய்யாபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி காமராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் அவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். மற்றொரு பகுதியில் அவரது மகன் அருண் பாண்டி, மருமகள் கிரிஜா, பேத்திகள் நிஷா ஶ்ரீ, உமா ஶ்ரீ ஆகியோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதில் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் ஒரு பகுதியில் இருந்த சுவர் முழுவதும் முற்றிலும் சரிந்து வீட்டின் வெளிப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இடிந்த சுவர் அருகில் உள்ள வீட்டுச் சுவரின் மீது விழுந்ததில் அந்த வீட்டில் இருந்த ஜன்னல் மற்றும் சிமெண்ட் காரைகளும் பெயர்ந்து சேதமடைந்து விட்டது.
இடிந்த சுவர் வீட்டின் உள்பகுதியில் விழாமல், வெளிப்பகுதியில் யாரும் பயன்படுத்தாத இடத்தில் விழுந்ததால் நல் வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில் தெருவில், மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருவர் இரண்டு சக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் சிறிய காயம் ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu