நீதித்துறை வரலாற்றில் முதல் முறை..! பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு..!

கொடைக்கானல் கோர்ட் தீர்ப்பு (கோப்பு படம்)
கொடைக்கானல் மேல்மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுதி நடத்தி வருகிறார். இவர், கடந்த பிப். 4-ல் கொடைக்கானல் சென்று விட்டு காரில் தனது விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மன்னவனூரைச் சேர்ந்த ஜீவா (22), பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகியோர் காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணுக்கு இருவரும் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் கொடைக்கானல் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜீவா, பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. போலீஸாரும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு விசாரணை முடிந்த நிலையில் நீதித்துறை நடுவர் கே.கார்த்திக் நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பெண் ஒருவர் தனக்காக நிற்கும்போது, அவர் எல்லா பெண்களுக்காகவும் நிற்கிறார் என்பதே அர்த்தம். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தை பாதுகாப்பதற்கும் நாம் அனைவருக்கும் பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாதவை ஆகும்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து தீர்வு காணும் போது எதிரிகள் பற்றி நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை குற்றம் செய்யும் நபர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நிகழ்வாக அமைய வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து ஆண்களும் பெண்களை நன்றாக நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் எதிரிகள் மீதான குற்றசாட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதித்துறை நடுவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.இந்த வழக்கில் சம்பவம் நடந்து 9-வது நாளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu