கொடைக்கானலில் மலர்களின் பெயரை அறிய புதிய வசதி அறிமுகம்
கொடைக்கானல் பூங்காவில் மலர்களின் பெயரை பார்வையாளர்கள் அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்களின் விவரங்களை அறிய கியூஆர்கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலமாக பூக்களின் விவரங்கள் மற்றும் அதன் குடும்ப வகைகள், எந்த சமயங்களில் இவை பூக்கும் என்பது உள்ளிட்ட முழு விபரமும் அறிந்து கொள்ளும் வகை யில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலா பயணிகள் எளிதாக பூக்களின் பெயர்களை கண்டறியலாம் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கோடை காலத்திலும், பிரையன்ட் பூங்காவில் வருடாந்திர மலர் கண்காட்சி தொடங்கும் போது, கொடை ஏரியின் கரைகள் வண்ணம் மற்றும் நறுமணத்தின் வெடிப்பில் திளைக்கும். பிரையண்ட் பூங்கா, கொடை ஏரியின் கிழக்குக் கரையில், இந்த மலைவாசஸ்தலத்தைப் போலவே பழமையான,அரிய கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் மரங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அழகிய தாவரவியல் பூங்காவாக உள்ளது.
1908 ஆம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த வன அதிகாரி எச்.டி.பிரையன்ட், கொடை ஏரிக்கு அருகில் ஒரு சிறிய பூங்காவை அமைத்தார். அவரது பெயரால் அமைக்கப்பட்ட பூங்கா தற்போது 20 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்காவாக உருவாகியுள்ளது. தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த பிரையண்ட் பூங்கா, பல ஆண்டுகளாக பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், கொடைக்கானலின் அடையாளச் சின்னமாகவும் திகழ்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிடப்பட்ட பலவகையான செடிகள், கற்றாழை மற்றும் மரங்களின் தாயகமான பிரையன்ட் பார்க், எண்ணற்ற மலர்களின் வண்ணங்கள் மற்றும் நறுமணத்தால் அலங்கரிக்கப்பட்ட அமைதியான நிலப்பரப்பில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட மிகவும் சிறந்த ஓர் இடமாகும்.
இந்த பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ரோஜாக்களின் தொகுப்பு உள்ளது. கோடை மாதங்களில் பூக்கள் வண்ணத் திருவிழாவில் பூக்கும்போது பூங்கா முழுவதும் திருவிழாக் காட்சியாக மாறிவிடும். கண்ணாடி மாளிகை என்பது பூங்காவின் தனித்துவமான மற்றுமொரு அம்சமாகும், இது பல்வேறு வகையான மனதிற்கு கவர்ச்சியான தாவரங்களைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 175 ஆண்டுகள் பழமையான யூகலிப்டஸ் மரமும் இந்த பூங்காவில் உள்ளது. தாவரங்கள் மற்றும் மரங்களின் பன்முகத்தன்மை பூங்காவை பலவகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக நிதம் மாற்றுகிறது. பல வகையான பூக்கள் மற்றும் நடனமாடும் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் சாதாரணமாக உலா வருவதற்கு கொடைக்கானலில் இதை விட சிறந்த இடம் வேறு எதுவுமில்லை.
மே மாதத்தில் நடத்தப்படும் வருடாந்திர மலர் கண்காட்சி, பூங்காவிற்குச் சென்று அதன் அழகை முழுமையாக அனுபவிக்க சிறந்த நேரமாகும். தோட்டக்கலைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியானது, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு வகையான மலர்கள் மற்றும் தாவரங்களை அறிவுப்பசி மற்றும் கண்காட்சிக்காக ஒன்றுசேர்க்கிறது.
இந்த பூங்கா கல்விக்கான நடைமுறை மையமாகவும், அலங்கார தோட்டக்கலைக்கான செயல்விளக்க மையமாகவும் செயல்படுகிறது. பிரையன்ட் பூங்காவின் பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு மதியம் கழிக்காமல் கொடைக்கானலுக்கு உங்கள் வருகை நிறைவடையாது. பூங்காவில் எண்ணற்ற ரோஜா மலர்களால் நறுமணம் வீசும். அருகிலுள்ள கொடை ஏரியிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, தகிக்கும் உங்கள் மனதைத் தணித்து, புத்துணர்ச்சியூட்டுவது உறுதி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu