திண்டுக்கல் அருகே டிப்பர் லாரிகளில் மண்திருட்டு: படம் பிடித்தவர்களைக் கண்டதும் ஓட்டம்
திண்டுக்கல் அருகே கண்மாயில் மண்திருட்டை படம் எடுக்கச் சென்ற செய்தியாளர்களைக் கண்டதும் தப்பிச்சென்ற லாரி
திண்டுக்கல் அருகே 5 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண் திருட்டை படம் எடுக்கச்சென்ற செய்தியாளரை கண்டதும் தப்பி ஓடியசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆத்தூர் தொகுதிக்குள்பட்டது அமலிநகர். இப்பகுதியிலுள்ள ஜாதி கவுண்டன்பட்டி மக்களுக்கு சொந்தமான குளத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு வந்தனர் .
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற செய்தியாளர்களை கண்டதும் டிப்பர் லாரிகளை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இரவு பகலாக இப்பகுதியில் மண் திருட்டு நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மண் திருட்டில் ஆளும் கட்சிப்பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் , கிராவல் மண் திருட்டு சம்பந்தமாக பொதுமக்கள் யாராவது இவர்களிடம் புகார் கூறினால் அவர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் சீட்டு பெறப்பட்டுள்ளதாக கூறி ஆறுகள், குளங்கள், ஏரிகளில் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக மண் மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக இது போன்ற கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் . மேலும் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வாகனங்களை அதிவேகமாக செலுத்துவதால் பெரும் விபத்துகள் ஏற்படும் வகையில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu