கன்னிவாடியில் ரூ.5.90 கோடியில் பேருந்து நிலையம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல்

கன்னிவாடியில் ரூ.5.90 கோடியில் பேருந்து நிலையம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல்
X

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி

திமுக ஆட்சி அமைந்தவுடன் 200 நாட்களுக்குள் கன்னிவாடியில் புதிய பேருந்துநிலையம் அமைக்க 6 கோடியில் இன்று பணிகள் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கன்னிவாடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிய பேருந்துநிலையப்பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5கோடியே 90லட்சம் மதிப்பில் புதிய பேருந்துநிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், கடந்த 2011ம் வருடம் திமுக ஆட்சியின் போது பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.1.5கோடி மதிபில் பேருந்துநிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.அதன்பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் 200 நாட்களுக்குள் கன்னிவாடியில் புதிய பேருந்துநிலையம் 6 கோடி மதிப்பில் அமைக்க இன்று பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இது போல சீவல்சரகு பகுதியில் கூட்டுறவத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் துவங்கப்பட உள்ளது.50 வருடங்களாக சின்னாளபட்டியில் உள்ள சாயப்பட்டறை தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கானும் வகையில் சாயசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஆத்துப்பட்டியில் பாலம் மற்றும் தடுப்பனை வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஆத்தூர் தொகுதி மக்களின் அனைத்து குறைகளும் கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும்.இங்கு கட்டப்படும் புதிய பேருந்துநிலையத்தில் இரண்டு நுழைவு வாயில்கள் இரண்டு உணவகங்கள், தரைத்தளம் மற்றும மேல்தள வசதியுடன் வணிக வளாகம்,மழைநீர் சேகரிப்பு உட்பட அனைத்து கட்டமமைப்பு வசதிகளும் சிறப்பாக அமைய உள்ளது.இதுபோல கன்னிவாடி பேருந்துநிலையத்திலிருந்து சென்னைக்கும், பெங்களுருக்கும் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். விரைவில் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சியில் முறையான பேருந்துநிலைய வசதி இல்லாததால் பேருந்துகள் நிற்காமல் சென்று கொண்டிருந்தன. இது தவிர சாலையில் பேருந்துகளை நிறுத்தும் போது போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டு வந்தது. ஆத்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியிடம் பேருந்து நிலைய வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக கூட்டறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5கோடியே 90லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கன்னிவாடியில் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை யில் நடைபெற்றது. திண்டுக்கல் எம்.பி.ப.வேலுச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, பேருராட்சிகளின் உதவி இயக்குநர் மனோ ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் விசாகன் பேசியது, ஆத்தூர் தொகுதி மக்கள் அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதிக்கு செய்ய வேண்டிய கோரிக்கைகளை கேட்க வேண்டியதே இல்லை. கூட்டுறவத்துறை அமைச்சரே ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் செய்ய வேண்டிய நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார். மக்கள் நலனுக்காக செயல்படக்கூடிய அமைச்சராக கூட்டுறவுத்துறை அமைச்சர் உள்ளார் என்றார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, மலை கிராம மக்களுக்கு தார்சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது திமுக ஆட்சிதான் குறிப்பாக மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள ஆடலூர், பன்றிமலை, குத்துக்காடு, சோலைக்காடு, தோனிமலை உட்பட அனைத்து மலைப்பகுதிகளுக்கும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது திமுக ஆட்சிதான் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் தண்டபானி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணைப்பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், கன்னிவாடி பேரூர்கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் புவனராணி,தலைமை பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஊராட்சிமன்ற தலைவர்கள் அருணாசலம், தங்கபாண்டியன், கொத்தப்புள்ளி ஊராட்சி சுந்தரி அன்பரசு, டி.பண்ணைப்பட்டி தனபாக்கியம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் முத்துகிருஷ்ணன்,ஏ.ஆர்.கே.ரமேஷ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் காளீஸ்வரி மலைச்சாமி, திருப்பதி, புதுப்பட்டி திமுக நிர்வாகி உதயக்குமார், கன்னிவாடி நகர அவைத்தலைவர் பெருமாள், 14வது வார்டு பூமி, இளைஞர் அமைப்பாளர் கோபி, மாவட்ட பிரதிநிதி பெருமாள், தேங்காய் சரவணன், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் இசக்கி நன்றி கூறினார்.

Tags

Next Story