ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசை விழா

ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசை விழா
X
ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் வழிபாடு நடத்த வந்த பக்தர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டியில் சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். வெளியூர் பக்தர்கள் இங்கு வந்து கிடா மற்றும் சேவல்களை பலியிட்டு அன்னதானம் வழங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருவிழாவில் கலந்து கொள்ள வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மேற்கு தொடர்ச்சி மலை குகையில் உள்ள ஸ்ரீசடையாண்டி உள்ளிட்ட 21 தெய்வங்களை வணங்குவதற்காக கரடுமுரடான மலைப்பாதையில் ஏறிச்சென்று வழிபட்டனர். ஆடி அமாவாசைக்காக செம்பட்டி சித்தையன்கோட்டை, ஆத்தூர், அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி எடுத்து சடையாண்டி சுவாமியை வழிபட்டனர். திருவிழாவில், சின்னாள பட்டி, கன்னிவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர் பக்தர்களும் லாரி, வேன், ஆட்டோக்களில் வந்து சடையாண்டி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆத்தூர் காமராஜர் அணையில் யாரும் குளிக்க கூடாது என செம்பட்டி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர். சடையாண்டி கோவிலில் குடிதண்ணீர், சுகாதாரம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!