ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை
X

ஒகேனக்கல் அருவி  கோப்புப்படம் 

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க 2-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரித்து வந்தது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 2-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா