கேரள சமாஜம் சார்பில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி
கேரளா சமாஜம் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி
நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்குவார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம்.
குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.
மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.
தர்மபுரி கேரள சமாஜத்தின் சார்பில் 22-வது ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் விழா இன்று தர்மபுரியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பகவதி கோவில் மேல்சாந்தி பகவதி சவாமி நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதினார்.
பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து எழுதும் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu