வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி
X
தர்மபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து விவசாயிகள் காய்கறிகளை விளைப்பதில் ஆர்வம் காட்டி வருவதால், மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது

தர்மபுரி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக, தக்காளி, சிறிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய், குடை மிளகாய், இஞ்சி, பாகற்காய் உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் வரத்து குறைந்தது. அதனால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

தக்காளி, சிறிய வெங்காயம், இஞ்சி ஆகியவை, கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. மற்ற காய்கறிகள், கிலோ 60க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. இதனால், பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது தர்மபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் கத்திரி, வெண்டை, பாகற்காய், முள்ளங்கி, சுரைக்காய் ,உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளும் பயிரிட்டு வருகின்றனர். காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைய தொடங்கியுள்ளது மேலும் கத்திரிக்காய் விலை அதிக வரத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கத்திரிக்காய் வெண்டைக்காய் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளது. மேலும் இங்கு விளையும் பச்சைக் கத்திரிக்காய் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகள் பெரும்பாலும் நீல நிற கத்திரிக்காய் உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து மிகுந்தது என்பதாலும் அனைத்து விசேஷங்களுக்கும் கத்திரிக்காய் பயன்படுத்தப்படுவதால் விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது பரவலாக தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதால் வரத்து அதிகரித்துள்ளது இதனால் உழவர் சந்தையில் கிலோ 8 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடத்தில் கிலோ3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிமார்க்கெட்டில் 8 ரூபாய் முதல் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் இந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . இதனால் நஷ்டத்தை அடைந்த விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை ஏரி, குளம் ஆறு போன்றவைகளில் கொட்டிச் சென்றனர். பயிரிட்ட தக்காளி செடிகளை அழித்து மாற்று பயிருக்கு மாறினார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் கிலோ தக்காளி 160 ரூபாயும், வெளி மாவட்டங்களில் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக விலை நீடித்ததால் விவசாயிகள் தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர்.

மீண்டும் தக்காளி வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை படிப்படியாக குறைந்து கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா , மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் தர்மபுரி மாவட்ட உழவர் சந்தையில் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா