தொடர் விடுமுறை: ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒகேனக்கலில் பரிசல் சவாரி - கோப்புப்படம்
பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தர்மபுரி மாவட்ட முதன்மைச் சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும். கா்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
கடந்த சில வாரங்களாக காவிரியில் நீா்வரத்து குறைவாக இருந்ததாலும், காலாண்டுத் தோ்வு போன்ற காரணங்களால் ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
தற்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு, தொடர் விடுமுறை என்பதால் ஒகேனக்கல் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகையினால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், நடைபாதை, முதலைப் பண்ணை, உணவருந்தும் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம்,பரிசல் துறை, சினி அருவி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவிகள், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் குளித்து மகிழ்ந்தனா். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் மாமரத்துக்கடவு பரிசல் துறை பகுதியில் குவிந்ததால் பாதுகாப்பு உடை இல்லாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகையினால் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை அதிகரித்த போதிலும், அசைவப் பிரியா்கள் மீன்களை வாங்கி சமைத்து உணவருந்தினா்.
ஒகேனக்கல்லில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தததால் சுற்றுலா வாகனங்கள் காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu