சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள், அச்சத்தில் பொதுமக்கள்
தெருவில் சுற்றி திரியும் நாய்கள் - கோப்புப்படம்
தர்மபுரி நகரை ஒட்டி உள்ள இலக்கியம்பட்டி, செந்தில் நகர், டி.ஏ.எம்.எஸ். காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. தர்மபுரி-சேலம் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்த பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த பகுதிகளில் நடமாடும் தெருநாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்துவது தினமும் நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது. இதனால் பகல் நேரத்திலேயே நாய்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில் சுற்றித்திரிவதால் அச்சமடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்தப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வெண்ணாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் சென்று வரும் வகையில் அமைந்திருப்பதால் பகல் நேரத்தில் மட்டுமின்றி நள்ளிரவு நேரங்களிலும் பொதுமக்கள் போக்குவரத்து கொண்டதாக உள்ளது. இலக்கியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளில் இருந்து இறங்கி இந்த சாலை வழியாக பலர் நடந்து செல்கிறார்கள்.
குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பகுதியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே தெருநாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றி திரிகின்ற தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரிப்பதை கட்டுப்படுத்த நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளை செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu