அரசு மருத்துவ கல்லூரி அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சேலம் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஒரு நாளைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு எதிரே தர்மபுரியின் முக்கிய சாலையாக இருந்து வரும் எஸ்.வி ரோடு பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
மேலும் எஸ்.வி ரோட்டில் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் பேருந்துகள் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லும் பெற்றோர்கள், மற்றும் தர்மபுரி –சேலம் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால் மருத்துவமனைக்கு எதிரே செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து உணவகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பேருந்துக்கு செல்வதற்காக மருத்துவமனை ஒட்டி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிறுத்தத்தில் நகர பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள், சேலம் தர்மபுரி சாலையில் இருந்து மருத்துவமனை ஒட்டி உள்ள பகுதியில் அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைத்துள்ளது. அந்த சாலையின் வழியாக நகர பஸ்கள், மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள அணுகு சாலையில் பேருந்துகள் செல்ல தவாறு பெரிய பள்ளத்தை தோண்டி உள்ளனர். மேலும் அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் தர்மபுரி சேலம் சாலையில் நின்று பேருந்தில் ஏறி செல்வதால் பெரும் போக்குவரத்து இடையூறு இருந்து வருகிறது.
மேலும் தர்மபுரி மாவட்டம் முழுவதிலும் இருந்து விபத்துக்கள், பிரசவத்திற்காக வரும் பெண்கள் உள்ளிட்டவர்களை ஏற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் உள்ளே வருவதற்கும் சிரமப்படுகிறது.
இதனால் மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பொது மக்கள் செல்லும் வகையில் சாலைக்கு குறுக்காக மேம்பால நடைபாதை அமைக்க வேண்டும். பேருந்து நிறுத்த அணுகு சாலையை சீரமைத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu