தர்மபுரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 277 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி தொலைபேசி நிலையத்தில் இருந்து தலைமை தபால் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்ற தூய்மை பணியாளர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அங்கம்மாள், குட்டியப்பன், வெங்கட்ராமன், ராஜா, ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பென்னாகரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி நாகராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் பாலக்கோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி கலாவள்ளி தலைமை தாங்கினார். கவிதா, ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட இணை செயலாளர்கள் சண்முகம், முரளி ஆகியோர் தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கம்பைநல்லூரில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ஹானஸ்ட் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தரமற்ற வேலை மற்றும் குறைந்த கூலியை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த மற்றும் சுய உதவி குழு தூய்மை பணியாளர்களை தொகுப்பு ஊதிய முறைக்கு மாற்ற வேண்டும். 50 வயதை கடந்த தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 180 பெண்கள் உள்பட 277 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!