தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு
சுகாதார சீர்கேட்டில் உள்ள தர்மபுரி அரசு மருத்துவமனை
தர்மபுரி சேலம் புறவழி சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி வளாகம், அவசர சிகிச்சை பிரிவு , உள்ளிட்ட பகுதிகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி உள்ளதால், சிகிச்சைக்கு வருபவர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தர்மபுரி மாவட்டம் மட்டும் இன்றி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் பிரசவம், விபத்து சிகிச்சை உட்பட, பல்வேறு சிகிச்சைகளுக்கு இங்கு உள்நோயாளிகள் மட்டும் இன்றி, புறநோயாளிகளாக தினந்தோறும், 2000 க்கும் மேலானோர் வந்து செல்கின்றனர்.
1200 படுக்கை வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரசவ வார்டு மற்றும் பார்வையா ளர்கள் காத்திருப்பு அறை அருகே உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில தினங்களுக்கு முன் சேதமடைந்தது.
மேலும், 500 படுக்கை அறைகள் கொண்ட பிரதான கட்டடத்தில் உள்ள கழிவறை குழாய்கள் சேதமடைந்துள்ளதுடன், கழிவறைகளில் இருந்து நேரடியாக குழாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும், தற்போது மழை காலமாக உள்ளதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. சேதமான சாக்கடை கால்வாயை சீரமைக்கவும், கழிவறைகளில் இருந்து கழிவு நீர் கட்டடத்தில் மீது வெளியேறுவதை தடுக்க, தர்மபுரி மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ஆர்வம் காட்டாமல் உள்ளது.
மேலும் அவசர சிகிச்சை பிரிவு அருகே பொதுமக்கள் காலணிகளை விடும் இடத்தில் எலிகள் ஓடி விளையாடி துர்நாற்றம் வீசி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உயிருக்கு அபாயம் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மட்டும் இன்றி, கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
இதனால், இங்கு சிகிச்சை பெற வருபவர்கள் மட்டும் இன்றி, அவர்களை காண வருபவர்களுக்கும், பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, தர்மபுரி அரசு மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகள், கழிவு நீர் கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu