ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை நாட்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 முறை அமாவாசை தினம் வந்தது. இதில் கடந்த மாதம் 17-ம் தேதியன்று அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை விட இன்று ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாக பக்தர்கள் கருதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து 2-வது ஆடி அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப்பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஒகேனக்கல்லில் நேற்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 5000 கனஅடியாக இருந்த தண்ணீர் அளவு நேற்று வினாடிக்கு 8,000 கன அடியாக சற்று அதிகரித்து வந்தது. இன்றும் அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பேருந்து நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமே கூட்டம் அதிகளவில் வரும், இதைத்தவிர வருடத்தில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுப்பதற்காகவே அதிகளவில் கூட்டம் வருவதால், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu