ஒகேனக்கல்லில் நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
X

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பினால் ஐந்தருவி மூழ்கும் நிலை உள்ளது.

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடக மாநிலம் குடகு, சிவமொக்கா,ஹசான், கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 31 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தற்போது 36 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!