தர்மபுரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை: இருவர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை:  இருவர் பலி
X

சூறை காற்றுடன் மழை (கோப்புப்படம்)

பென்னாகரம் அருகே இன்று மாலை பலத்த காற்றால் மாடியில் இருந்து வீசப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பென்னாகரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மிக பலத்த காற்றுடன் மழை பெய்தது. பென்னாகரம் வட்டம் கோடிஅள்ளி ஊராட்சி தெய்வபுரம் ஒண்டிக்கோட்டையை சேர்ந்த முனிமாது மகன் ஜெயவேல்(35). கட்டிட தொழிலாளியான இவருக்கு மணமாகி சின்னப்பொண்ணு என்ற மனைவி உள்ளார்.

இவர் பென்னாகரம் அடுத்த ஜக்கம்பட்டி பகுதிக்கு சென்றபோது அங்கே பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் இருந்த மளிகைக் கடையின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த தகர கூரையை சரிசெய்ய மாடிக்கு சென்றுள்ளார். மாடியில் இருந்தவரை பலத்த காற்று தூக்கி வீசியதில் கட்டிடத்தை ஒட்டியிருந்த தார்சாலையில் ஜெயவேல் விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பென்னாகரம் போலீஸார் ஜெயவேலின் சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர்.

இதுதவிர, பலத்த காற்றின்போது பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் இருந்த பெரிய மரங்கள் முறிந்தும், வேருடன் சரிந்தும் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதேபோன்று கிருஷ்ணாபுரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. தெரியாமல் இந்த மின்கம்பியை மிதித்த பி மோட்டுபட்டியை சேர்ந்த விவசாயி முனியப்பன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!