பென்னாகரம் அருகே கூட்டுறவு சங்க தலைவர் மீதான தவறை மறைக்க நியாய விலை கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஜங்கமையனூரில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 253 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை பெறுவதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் காத்திருந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் நியாய விலைக் கடையின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்க தலைவர் தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக நேற்று ரேஷன் கடை விற்பனையாளர் முருகனை பணிநீக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில்,
ஜங்மையனூரில் செயல்பட்டும் வரும் ரேஷன் கடை பகுதிநேர கடையாகும். வெள்ளிக்கிழமை திறக்க வேண்டிய கடையை அதிமுகவை சேர்ந்த நாகனூர் கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன் பணியாளர்களை மிரட்டி வியாழக்கிழமையே திறக்க வைத்துள்ளார்.
மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொருள்களை வழங்க செயலாளர் மற்றும் விற்பனையாளரை கட்டாயப் படுத்தி உள்ளார். கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதில் திமுக பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை கூட்டமாக கூட்டி தன் பலத்தை நிரூபிக்க பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணியை வரவழைத்து நிவாரணப் பொருள்களை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து தலைவரின் தவறான செயலை மறைக்க விற்பனையாளர் முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி ரேஷன் கடை விற்பனையாளர் ஆகும். இது குறித்து முறையாக கூட்டுறவு சங்க இணை இயக்குனர், மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu