பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்க வலியுறுத்தி காகித படகு விடும் போராட்டம்

பேருந்து நிலைய கட்டுமானப் பணியை  தொடங்க வலியுறுத்தி காகித படகு விடும் போராட்டம்
X

காகித படகு விடும் வாலிபர் சங்கத்தினர்.

பென்னாகரம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் காகித படகு விடும் போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக அரசால் டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அவசரகதியில் பேருந்து நிலையத்தை தற்காலிகமான இடத்திற்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் மாற்றப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது பள்ளத்தில் நீர் ஊற்று பெருக்கெடுத்த காரணத்தால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. சுமார் ஐந்து மாத காலமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பெரிய பள்ளத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்கிறது. இதனால் ஏற்கனவே பேரூராட்சியின் சார்பில் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.மேலும் பள்ளத்தில் யாரேனும் தவறி விழும் நிலையும் உள்ளது.

எனவே பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், தோண்டப்பட்டு உள்ள பள்ளத்திற்கு தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காகித படகு விடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் நகர தலைவர் சபரிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதியமான், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜீவன், தங்கராஜ் மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு செயலாளர் அன்பு, சக்திவேல் பெண்ணாகரம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக தோண்டப்பட்ட பள்ளத்தில் காகிதப் படகு விட்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!