புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல் பகுதியில் பரிசலில் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்

ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும் பரிசலில் சவாரி சென்றும் மகிழ்ந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் இங்குள்ள அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இதனிடையே கர்நாடக- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனிடையே இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை நாளையொட்டி நேற்றும் இன்றும் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஐந்தருவி பகுதிக்கு சென்று செல்பி எடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 115 அடியாக நீடிப்பதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil