இலங்கை தமிழர்களுக்காக 227 புதிய வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
நாகாவதி அணையில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (26.11.2021) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தலைமைவகித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் புதிய வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நேற்று கடலூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இன்று தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் நலன் காக்கவும், அவர்களின் வளர்ச்சிக்கும், வாழ்வாதார மேம்பாட்டிற்கும் என்றென்றும் உறுதுணையாக இருந்து வருவது திமுக அரசு, இப்பொழுதும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் நலன் காத்து வருபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.
விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் விதி எண். 110-ன் கீழ் அறிவித்துள்ளதன்படி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் நாகாவதி அணை முகாம், பாலக்கோடு வட்டத்தில் கெசர்குளி அணை முகாம், சின்னாறு அணை முகாம், அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய 4 இடங்களில் ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 227 புதிய வீடுகள் கட்டும் பணிக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்படுகிறது. இது மகிழ்ச்சியான ஒன்றாகும்.
இவ்வாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ரூ.10,94,14,000/- மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டும் பணிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்கள். அதனை தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் 2414 நபர்களுக்கு ரூ.18,23,000/- மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் உயர்தர கைத்தறி துணிகளும், 712 குடும்பங்களுக்கு ரூ.9,14,920/- மதிப்பில் சேலம் உருக்காலை நிறுவனத்தின் 8 எவர்சில்வர் சமையல் பாத்திரங்களும், 184 குடும்பங்களுக்கு ரூ.5,27,528/- மதிப்பில் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளைகளும், 40 சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியாக தலா ரூ.75,000/- வீதம் ரூ.30,00,000/- மதிப்பிலான கடன் உதவியும் என மொத்தம் ரூ.62.66 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக 10 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம்.பி.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தர்மபுரி சார் ஆட்சியர் சித்ராவிஜயன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பி.பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசன், வட்டாட்சியர்கள் அசோக்குமார், மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் என்.செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்தி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu