தண்ணீர் வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் ஐந்தருவி.!

தண்ணீர் வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் ஐந்தருவி.!
X
தொங்குபாலம், ஐந்தருவிகள் மற்றும் ஆயில் மசாஜ், மீன் வகைகள் ஒகேனக்கல்லில் பிரபலமானவையாகும்.

கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நுழைகிறது. பருவமழை பெய்யும் காலங்களில் கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடும்போதும் அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி நீர் வரை ஒகேனக்கல் அருவியில் செல்லும்.

அந்த சமயத்தில் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதை காணமுடிந்தது. பருவமழை காலங்களில் அங்குள்ள மெயின்அருவி மற்றும் சினி பால்ஸ், 5 அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணமுடியும். அந்த சமயங்களில் தமிழகத்தில் உள்ள பிறமாவட்டம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை புரிவர்.

அவர்கள் தொங்குபாலம், மற்றும் ஐந்தருவிகளை பார்த்து மகிழ்வர். அதுமட்டுமின்றி ஆயில் மசாஜ், மீன் வகைகள் ஒகேனக்கல்லில் பிரபலமானவையாகும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைய ஆரம்பித்தது. தண்ணீர் குறைந்தாலும், பருவமழை பொய்த்து போனாலும், வினாடிக்கு 300 கனஅடிக்கு குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக கரைபுரண்டு ஓடிய காவிரி ஆறு வெறும், பாறைகளாக காட்சி அளிக்கிறது. ஆர்ப்பரித்து சென்ற ஐந்தருவிகள் தற்போது வறண்டு காணப்படுகிறது. காவிரி ஆறு குட்டையாக மாறி நீரோடை போன்று தண்ணீர் செல்கிறது.

தண்ணீர் இன்றி காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்து விட்டது. மீண்டும் பருவமழை பெய்து, எப்போது ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் என்ற கவலையுடன் ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!