ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் 2வது ஆயத்த பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
ஒகேனக்கல்லில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி.
ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் இரண்டாவது ஆயத்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, நேரில் ஆய்வு -
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஒகேனக்கல்லில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு, ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியாக ரூ.1585.60 கோடியும், மாநில அரசின் குறைந்த பட்சத் தேவைத் திட்ட நிதி உதவியாக ரூ.307.48 கோடியும் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்குத் தொகையாக ரூ.35.72 கோடியும் என மொத்தம் ரூ.1928.80 கோடி மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் ஏற்கனவே முடிவுற்றுள்ளது. இந்நிலையில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தடையின்றி காவிரிக் குடிநீர் கிடைத்திடவும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை மேலும் உயர்த்தப்படும்.
இதற்காக ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என கடந்த ஜன.20ம் தேதி, காணொலிக் காட்சியின் வாயிலாக நேரலையில் நடைபெற்ற தர்மபுரி மாவட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார்.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை துரிதமாக மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, துறை அலுவலர்களுடன் ஒகேனக்கல்லில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கான தலைமை நீரேற்று நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், பிரதான சமநிலை நீர்தேக்கத் தொட்டி, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேவையான இடம் தேர்வு செய்வது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் ஈ.சங்கரன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தர்மபுரி மாவட்ட செயற்பொறியாளர் இந்திரா, பென்னாகரம் வட்டாட்சியர் அசோக்குமார், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu