நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை
X

ஒகேனக்கல் அருவி.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 30 ஆயிரம் கன அடியாக வந்தது மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பரிசல்கள் காவிரி கரையோரம் கவிழ்த்து வைக்கப்பட்டன. தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மடம் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் வேண்டாம் என்று ஒலிப்பெருக்கி மூலம் அவர்கள் அறிவுறுத்தினர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai as the future