ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க தொடர்ந்து தடை

ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க தொடர்ந்து தடை
X

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து செல்லும் காவிரி நீர்.

ஒகேனக்கல்லில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முந்தினம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி பிலிகுண்டு தேன்கனிக்கோட்டை நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடைவிதித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதலைப்பண்ணை, மணல்திட்டு, ஆலம்பாடி, நாடார் கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது