பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து திமுக.,வினர் சாலை மறியல்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து திமுக.,வினர் சாலை மறியல்
X

பாப்பாரப்பட்டியில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

பாப்பாரப்பட்டியில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராகவும், அண்ணா திமுகவுக்கு ஆதரவாகவும், முன்னாள் பேரூராட்சி தலைவரான அண்ணா திமுக பிரமுகர் சொல்படி நடப்பதாக குற்றம் சாட்டி திமுகவைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு புதிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இந்து சமய அறநிலைத்துறை அனுமதியின்றி புதிதாக கட்டிடம் கட்டும் பணிகளோ, புதிய மின் இணைப்புகள் வழங்கக் கூடாது எனவும் ஏற்கனவே உள்ள மின் இணைப்புகளை ரத்து செய்யவும் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்படி நிலத்தில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும், அதனை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் திமுகவை சேர்ந்த நகர துணை செயலாளர் ஹாஜிராபி மனு அளித்திருந்தார்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமலும், அண்ணா திமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் சொல்படி கேட்டு அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டி இன்று பாப்பாரப்பட்டி பகுதி திமுகவில் உள்ள இஸ்லாமிய பொதுமக்களை திரட்டி திமுக பிரமுகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான தவுலத் பாஷா தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து பாப்பாரப்பட்டி முன்னாள் பேரூராட்சித் தலைவர் தவுலத் பாஷா கூறுகையில், இப்பிரச்சனை மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும், தாங்கள் அங்கம் வகிக்கும் திமுக உறுப்பினர் அட்டைகளை மாவட்ட செயலாளர் வசம் ஒப்படைப்போம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!