ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபர் உடல் மீட்பு

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபர் உடல் மீட்பு
X

காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நாமக்கல் வாலிபர் ஸ்டான்லி.

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபரின் உடல் இன்று மீட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் இவரது மகன் ஸ்டான்லி (வயது 25) எம்எஸ்சி பட்டதாரி. இந்நிலையில் நேற்று பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற தனது நண்பர் திருமணத்திற்கு பார்த்தசாரதி, சிவா உள்ளிட்ட மூன்று பேரும் வந்தனர்.

பின்னர் திருமணத்தை முடித்துவிட்டு மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். நண்பர்கள் அனைவரும் ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி மூவரும் சின்னாறு பரிசல்துறை அமைந்துள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது ஸ்டான்லி காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஸ்டான்லி தண்ணீரில் வேகமாக அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து நண்பர்கள் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஸ்டான்லியை தேடினர். ஆனால் அவர் எங்கும் காணவில்லை. அதைத் தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், பரிசில் ஓட்டிகள், மீனவர்கள் என ஸ்டான்லியை தேடிவந்தனர்.

இந்நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஸ்டான்லியின் உடலை இன்று மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story