ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
X

ஒகேனக்கல் பிரதான அருவி.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைந்தது.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நணைப்பாதையின் மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கன மழை மற்றும் நீர்திறப்பு அதிகரிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் வினாடிக்கு 13,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேட்டூர் அணை 114 அடி வரை நீர்மட்டம் இருப்பதால், ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் தேங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story