வத்தல்மலையில் சுற்றுலா தலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படுமா?

Vathalmalai Weather
Vathalmalai Weather-தர்மபுரி மாவட்டம், வத்தல்மலை கிராமங்கள் கடல்மட்டத்திலிருந்து 3,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குளிர்ந்த சீதோசன நிலையிலுள்ள இந்த வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, கருங்கல்லூர், சின்னாங்காடு, ஒன்றிக்காடு, நாயக்கனூர், திருவனப்பாடி, மன்னாங்குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காப்பி, மிளகு, ஆரஞ்சு, கமலா, பலா, ராகி, சாமை உள்ளிட்ட மலைப்பயிர்கள் இங்கு பயிரிடப்படுகிறது.
தர்மபுரியில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலுள்ள வத்தல்மலைக்கு கொமத்தம்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதைகள் ஆகும். மொத்தம் 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் இயற்கையான சூழ்நிலையில் இந்த மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த வத்தல் மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட பொது மக்கள் மற்றும் வத்தல் மலையில் வாழும் மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் வத்தல்மலை சுற்றுலாத்தலமாக்கப்படும் என்றும், வத்தல் மலைக்கு புதிய தார் சாலை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. வத்தல்மலையில் சுற்றுலாத்தலம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் முதல்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தோட்டக்கலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இடத்தில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பார்வை கோபுரம், ரிங் ரோடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தோட்டக்கலை துறை உயரதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். தோட்டக்கலை துறை, தாவரவியல் பூங்கா அமையும் இடத்தில் பெயர் பலகையும் வைத்து விட்டு சென்றனர்.
இந்தநிலையில் வத்தல்மலைக்கு ரூ.10 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் எதுவும் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது. தாவரவியல் பூங்கா அமையும் இடத்தில் வைத்திருந்த பெயர் பலகையும் காணாமல் போய்விட்டது. அந்த மலை கிராமத்தில் இப்போதே தனியார் சிலர் நிலத்தை வாங்கி தங்கும் விடுதிகளை கட்டி வருகின்றனர்.
வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கியப் பண்டிகை நாட்களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பத்தரை மணிக்கு சென்று இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான வத்தல்மலை சுற்றுலாத்தலம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும்? சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுவார்களா? என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உலக சுற்றுலா தினமான இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu