தருமபுரி அருகே தொகுப்பு வீடு கட்ட தொகை வழங்காததால் இருளர் இன மக்கள் அவதி

தருமபுரி அருகே தொகுப்பு வீடு கட்ட தொகை வழங்காததால் இருளர் இன மக்கள் அவதி
X

புதிய தொகுப்புவீடு கட்ட அரசு பில் தொகை வழங்க வேண்டும் என கதறும் பெண்கள்

இருளப்பட்டி ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு தொகை வழங்காததால் இருளர் இன மக்கள் சாலையோரம் ஓலைகுடிசை அமைத்து வசிக்கும் அவலம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் இருளப்பட்டி ஊராட்சியில் இருளப்பட்டி, நாகலூர், காமராஜர் நகர், இந்திரா நகர் , பீரங்கி நகர் என 5 கிராமங்கள் உள்ளது.இக்கிராமங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் இந்திராநகரில் 100க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த, 30, ஆண்டுகளுக்கு முன்பு அரசால் சுமார் 70 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இது மழையால் இடிந்து விழுந்தது.

இதனையடுத்து, 27 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 32 வீடுகள் மராமத்து செய்யவும், 22 வீடுகள் முழு சேதமானதாக கருதப்பட்டு, 16 வீடுகள் புதிதாக கட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளால் பசுமை வீடுகள் கட்ட உத்தரவு வழங்கப்பட்டது.

இதில்,12 வீடுகள், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 4 வீடுகள் 2.10 லட்சம் மதிப்பில் கட்டும் பணியை இருளர் இன மக்கள் தொடங்கினர். இதில் நான்கு தவணைகளாக பணம் கொடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள் இதுவரை ஒருமுறைகூட வீடு கட்டியதற்கான தொகை வழங்கவில்லை. இதில் சிலர் வீடு கட்ட முடியாமல் பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.

அதிகாரிகளின் பேச்சை நம்பி வீடுகளை இடித்து, கட்டமுடியாமல் இருளர் இன மக்கள் நடுத்தெருவில் ஓலைகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர். பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே கட்டிய, கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளுக்கு முழு பில் தொகையும் வழங்கவேண்டுமென இருளர் இன மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே போன்று பட்டுகோனாம்பட்டி, சித்தேரி, மஞ்சவாடி,போதகாடு ஆகிய பகுதிகளில், 255 வீடுகளுக்கு பில் தொகை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future