சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை எச்சரித்த வனத்துறையினர்
வனப்பகுதிக்குள் உள்ள சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை, தடுத்து எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையில் சேர்வராயன் வடக்கு வனச்சரகம் பொம்மிடி பிரிவு பகுதியில் ஏற்காடு அடிவாரத்தில் ஆனைமடுவு உள்ளது. இங்கு மழைக்காலங்களில் பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. வனப்பகுதியில் உள்ள இந்த அருவிகளை ரசிக்கவும், ஆற்றில் குளிக்கவும் சிலர் வந்து செல்கின்றனர்.
மது அருந்தும் நோக்கத்துடனான குழுவினர் சிலர் இப்பகுதிக்குள் நுழைந்து வனம் மற்றும் வன விலங்குகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே, அப்பகுதியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்துடன் செல்பவர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்து, வனப்பகுதியில் நுழைவாயில் மற்றும் வனத்தில் ஆங்காங்கே அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பக்ரீத் பண்டிகையையோட்டி அரசு விடுமுறை தினம் என்பதால், சுற்று வட்டாரங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தடையை மீறி, வனப்பகுதிக்குள் வந்திருந்தனர். ஆனால் தடையை மீறி வனப்பகுதிக்குள் வந்தவர்களை வனத் துறையினர், தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து குளிக்க வந்தவர்களிடம் வனத்துறை பணியாளர்கள், ஆனைமடுவு பகுதியும் அதையொட்டிய வனப்பகுதியும் சுற்றுலா தலமாக பயன்படுத்த அரசால் அனுமதி அளிக்கப்படாத பகுதிகள். இங்கு காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. சுற்றுலா நோக்கத்துடன் வருவோர் மற்றும் மது அருந்தும் நோக்கத்துடன் வருவோரைக் கண்டால், இந்த வன விலங்குகள் மிரட்சி அடைகின்றன.
மேலும், காட்டாற்று அருவிகளின் பெரிய பாறைகளில் யாரேனும் வழுக்கி விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ஆனைமடுவு பகுதிக்குள் அவசியமற்ற யாரையும் அனுமதிக்க முடியாது. அத்துமீறி யாரேனும் நுழைந்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu