விலை வீழ்ச்சி: பாலக்கோடு பகுதியில் செடிகளில் அழுகி வீணாகும் தக்காளி

விலை வீழ்ச்சி: பாலக்கோடு பகுதியில் செடிகளில் அழுகி வீணாகும் தக்காளி
X

பாலக்கோடு பகுதியில், விவசாயத் தோட்டங்களில் பறிக்கப்படாமல் அழுகும் தக்காளிகள்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், விலை குறைவால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பறிக்கப்படாமல், தோட்டத்திலேயே அழுகும் பரிதாப நிலை உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் விவசாயிகள் அதிகளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். பாலக்கோடு மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, பேகரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வழக்கமாக சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்கின்றனர்.

அவற்றை, பாலக்கோடு பகுதியில் அமைந்த பிரத்தியோக தக்காளி சந்தையில் ஏற்றுமதி செய்து வருவது வழக்கம். பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதியாகிறது. கடந்த 4 மாதமாக தக்காளி கொள்முதல் விலை கிலோ 10 ரூபாய்க்கு குறைந்து விற்பனையாவதால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு, சாகுபடி செய்த தக்காளிகளை பறிக்காமல் விலை நிலத்திலேயே விட்டுள்ளனர்.

பாலக்கோடு தக்காளி சந்தையில் சந்தையில் ஒரு கூடை விற்பனைக்கு 20 ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்கின்றனர். தக்காளி விற்பனை செய்ய வரும் விவசாயிகள் சுங்கக்கட்டணம் கட்டி விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சுங்கக்கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள தக்காளி குளிரூட்டும் மையத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டு, தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!