பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
X

சீரமைப்பு பணிகள் நடைபெறும் பாலக்கோடு பேருந்து நிலையம் 

45 நாட்களுக்குள் பேருந்து நிலைய முழு சீரமைப்பு பணிகளும் முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் ஒப்பந்ததாரரின் வேலை சுணக்கமாக நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 24-ம் தேதி பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதையடுத்து புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளுக்காக தரைத்தளம் ஜேசிபி எந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதனை ஜல்லி கற்களை கொண்டு சமன் செய்துள்ளனர். அதில் பேருந்து நிலைய கடைகள் இருக்கும் பகுதியில் 10 அடி அகலம் 40 அடி நீளத்திற்கு பழைய தரைத்தளத்தை அகற்றாமல் மற்ற பகுதிகளை மட்டும் சமன் செய்துள்ளனர்.

பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளில் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே செய்வதற்கு 78 நாட்கள் கடந்துள்ளது. மேலும் 45 நாட்களுக்குள் பேருந்து நிலைய முழு சீரமைப்பு பணிகளும் முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் ஒப்பந்ததாரரின் வேலை சுணக்கமாக நடந்து வருகிறது.

தினந்தோறும் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது,

ஆனால், சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தர்மபுரி, சேலம், கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் வணிக கடைகள் முன்பு பந்தல் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

மேலும் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை வரும்போது மேலும் கூட்ட நெரிசல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு