தொடர் மழையால் விவசாய நிலத்திலேயே அழுகும் சாம்பல் பூசணிக்காய்: விவசாயிகள் வேதனை
கடத்தூர் பகுதியில் தொடர் மழையால் நிலத்திலேயே அழுகி வரும் சாம்பல் பூசணிக்காய்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாம்பல்(திருஷ்டி) பூசணிகாய் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளைகின்ற சாம்பல் பூசணிகாய் ஓசூர், கர்நாடகா, சென்னை, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் அடிக்கடி பெய்த பருவ மழையால் சாம்பல் பூசணி அதிக எடையுடன் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்கு வந்துள்ளது.
தற்போது ஆயுத பூஜை பண்டிகை வருவதால், சாம்பல் பூசணி விலை உயர்ந்தது விற்பனையாகும். மேலும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடத்தூர், சிந்தல்பாடி, தொங்கனூர், பொம்மிடி, பி.துறிஞ்சிபட்டி, பையர்நத்தம், பில்பருத்தி, கேத்துரெட்டிபட்டி, வேப்பிலைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சாம்பல் பூசணி அறுவடை செய்யாமல் விவசாய நிலங்களிலேயே அழுகி வருகிறது.
இதனால் அதிக எடை கொண்ட சாம்பல் பூசணி முழுவதும் விவசாய நிலங்களில் அழுகியும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் இருந்து வருகிறது.
தொடர் மழையல் சாம்பல் பூசணி அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் அழுகி வருவதால், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சாம்பல் பூசணி சாகுபடி செய்து பராமரிப்பு செய்யும் வரை ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஆனால் தற்பொழுது ஆயுத பூஜை வருவதால், அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத நிலையில், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu