பெரியாம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்: கலெக்டர் திவ்யதர்ஷினி பங்கேற்பு

பெரியாம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்: கலெக்டர் திவ்யதர்ஷினி பங்கேற்பு
X

பெரியாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டம்.

தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், திட்ட அறிக்கை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துல், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதிசெலவின விவரங்கள் குறித்தும், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடைசெய்தல், முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்,உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யர்சினி, பொதுமக்கள் தாங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை காவலர்களிடம் வழங்கிட வேண்டும் அல்லது குப்பை தொட்டிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக போட வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது சுற்றுபுறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களாகிய நீங்களும் குடிநீரை வீணாக்காமல், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்கும்போது தங்கள் பகுதியில் குடிநீரர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லா சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். மழைக்காலங்களில் கிடைக்கப்பெறும் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க முன்வர வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி நிலத்திடி நீர்மட்டம் உயர்த்திட வழிவகை செய்தல் வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய் துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

எனவே, தர்மபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா நோய் பரவுவதை தடுக்கவும் மற்றும் மூன்றாம் அலை பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளவும் உதவும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா நோய் தொற்றை ஒழிக்க கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தமாகக் கழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற அரசின் அனைத்து நோய் தடுப்பு, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றிடுவதோடு, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நோய் தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து, தர்மபுரி மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இக்கிராமசபைக்‌ கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு. இரா.வைத்தியநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கௌரவ் குமார் உதவி இயக்குநர் ஊராட்சி சீனிவாச சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், உதவி ஆணையர் கலால் தணிகாசலம், வட்டாட்சியர் சின்னா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆப்பிள் பிரியர்களுக்கான  புதிய  அறிமுகம்..! பழைய விலைக்கே அப்கிரேட்டட் மேக்புக் ஏர் எம்2, எம்3 மாடல்கள்..மிஸ் பண்ணிடாதீங்க!..