பாலக்கோடு அருகே கோடைக்கு முன்பே வறண்ட சின்னாறு அணை
பாலக்கோடு அருகே நீர் பாசன கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாததால் கோடைக்கு முன்பே வறண்ட சின்னாறு அணை.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை 50 அடி உயரம் உள்ளது. அணையில் 11 இடங்களில் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்து, பாலக்கோடு பேரூராட்சி, மாரண்டஹள்ளி பேரூராட்சி, தருமபுரி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அணையிலிருந்த தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் இந்த அணையை நம்பி 4500 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் உள்ளது.
தர்மபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீருக்கு ஆதராமாக உள்ள இந்த அணை கடந்த 20 ஆண்டுகளாக இதன் பிறப்பிடமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் இருந்து உற்பத்தியாகும் சின்னாறு ஆற்றின் மேலகிரியும், ஊடேதுர்க்கம் மலை பகுதியில் போதிய மழை இல்லாததால் தொடர்ந்து வறட்சியை சந்தித்து வருகிறது.
மேலும் நடப்பாண்டு பொழிந்த பருவமழையில் ஓரளவுக்கு தண்ணீர் நிரம்பியிருந்தது. தற்போது கோடை துவங்கும் முன்பே தண்ணீரீயின்றி வறண்டு குட்டை போல் காணப்படுகிறது. இதனால் பாலக்கோடு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
மேலும் இந்த அணையை நம்பி உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறி உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து வரும் அரசியல் கட்சியினர் எந்த ஒரு நீர் பாசன கால்வாய் திட்டத்தையும் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பருவமழை துவங்கினால் மட்டுமே சின்னாறு அணைக்கு தண்ணீர் வரத்து வரும் என்பதால், விவசாயிகள் பருவழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். இனியாவது இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் தண்ணீர் பிரச்சினைக்கு முழு தீர்வு காணவும் தமிழக அரசு உடனடியாக நீர்ப் பாசனக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu