வாவ்..பள்ளி மாணவர்கள்..! தர்மபுரி அருகே 40 ஆண்டு பழமையான கிணற்றை தூர்வாரி 2 ஆயிரம் மரக்கன்று வளர்ப்பு

வாவ்..பள்ளி மாணவர்கள்..!  தர்மபுரி அருகே 40 ஆண்டு பழமையான கிணற்றை தூர்வாரி 2 ஆயிரம் மரக்கன்று வளர்ப்பு
X

பாடி கிராமத்தைச் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து பராமரித்து வருகின்றனர்.

தர்மபுரி அருகே அரசு பள்ளிமாணவர்கள் 40 ஆண்டு பழமையான கிணற்றை தூர்வாரி 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்டது பாடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் மூக்கம்பட்டி, பெரியசவுளூர், சின்ன சவுளூர்,பாடி,கண்ணுகாரம்பட்டி,கவரன்கொட்டாய் உள்ளிட்ட ஆறு கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.போதிய மழையில்லாத காரணத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்ய முடியாமல் கூலிவேலைகளுக்காக பெங்களூரு,கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விட்டனர். இதனால் பல மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டனர்.

இதனால் சுற்று சூழலை பாதுகாத்து விவசாயத்தை பெருக்க அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அக்கிராமத்தில் உள்ள ஏரிகளிலும், சாலை ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியில் கடந்த ஏழாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த மரக்கன்றுகளுக்கு நாள்தோறும் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வளர்த்து வந்தனர். இதனால் ‌சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் போதிய அளவில் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. மரங்களைக்காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முயற்சியில் தற்போது பீனிக்ஸ் அமைப்பை உருவாக்கி சமூக ஆர்வலர் கோவிந்தசாமி தலைமையில் ஒன்றிணைந்து சுமார் 40 ஆண்டுகள் பழமையான கிணற்றை அரசு பள்ளிமாணவர்கள் தூர்வாரி சீர்திருத்தினர்.

தற்போது அதில் 20 அடிக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி தற்போது மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்த்து வருகின்றனர். மேலும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதும் மீதி நான்கு நாட்களுக்கு கிராமத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் குடிநீராகவும் மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தண்ணீரை பயன்படுத்தி நர்சரி வளர்த்து காய்கறி தோட்டம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மாணவர்கள் கூறினார்கள். நர்சரியில் கன்றுகள் வளர்த்து மக்களுக்கு இலவசமாக அனைவருக்கும் வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

மாணவர்களின் இந்த செயலால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!