எச்சரிக்கையை மீறி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
ஒகேனகலில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஒகேனக்கல் மிகப் பிரபலமான சுற்றுலா தலமாகும். வரிகளால் வர்ணிக்க முடியாத எழில் மிகுந்த இந்த அருவி, காவேரி ஆற்றிலிருந்து உருவாகிறது, இது ஒகேனக்கலில் மற்ற ஆறுகளுடன் கலந்து வேகத்தை கூட்டிக்கொள்கிறது. பாறை நிலப்பரப்பில் பாய்ந்து செல்லும் எண்ணற்ற நீரோடைகள் ஒரு புகை வடிவத்தை வெளிப்படுத்துவது போல் தெரிகிறது, எனவே புகை பாறைகள் என்ற பெயரை பெறற்றுள்ளது. நீரின் வேகமான நீரோட்டம் ஒரு வெள்ளை நுரை நீரோடையாக மாறி சுற்றுலாப் பயணிகளை கவரும் காட்சியாக அமைகிறது. இந்த சுற்றுலா தலத்துக்கு ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே இருக்கும்.
தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சில நேரங்களில் வெளிநாட்டவர்களும் கூட இங்கே சுற்றுலா வந்து செல்கின்றனர். இங்கு இருக்கும் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இங்கு, காவிரியாற்றின் சில பகுதிகள் சுழல் மற்றும் இழுவை நிறைந்த பகுதியாக உள்ளன. இதுதவிர, சில பகுதிகளில் ஆற்றில் முதலைகள் உள்ளன.
ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி உட்பட இது போன்ற பகுதிகளை தேர்வு செய்து, ஆபத்தான பகுதி. இங்கு குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது' என 5-க்கும் மேற்பட்ட மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த அறிவிப்புகளையும் மீறி சிலர் காவிரியாற்றில் குளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோரில் பெரும் பாலானவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை மதித்து நடக்கின்றனர்.
ஒரு சிலர் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு ஆற்றின் அருகில் செல்வது, ஆற்றில் இறங்குவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரில் சிலர் சில நேரங்களில் ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.
உயிரிழப்பு நிகழ்ந்த குடும்பங்களில் நீண்ட காலத்துக்கு சோகம் தொடரும் நிலை உருவாகி விடுகிறது. எனவே, அப்பகுதிகளில் காவல்துறை மூலம் கண்காணிப்பை அதிகரித்து இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும்.
அறியாமை, அதீத நம்பிக்கை போன்றவற்றால் காவிரியாற்றில் உள்ள ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆபத்தில் சிக்குபவர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu