புதுமைப்பெண் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றம்: ஆட்சியர் ஆய்வு
புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுவதற்கு உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Pudhumai Penn -தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுவதற்கு உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி இன்று (03.11.2022) நடைபெற்றது. இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்திஇன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது, சென்னையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை கடந்த 05.09.2022 அன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் கடந்த 5.9.2022 அன்று நடைபெற்ற விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- நிதி உதவி அன்றைய தினமே வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 5,389 மாணவிகள் 2 மாதங்களில் மொத்தம் ரூ.95,45,000/(ரூ.95.45 இலட்சம்) நிதி உதவி பெற்று பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் அரசு கல்லூரிகளிலோ அல்லது தனியார் கல்லூரிகளிலோ மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்வி, தொழிற்நுட்ப கல்வி, சட்டக்கல்வி போன்ற பல்வேறு வகையான உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- அந்தந்த மாணவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்பது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மிகச்சிறந்த உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகை பெண்களின் உயர்கல்விக்காக, உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று இத்திட்டத்தினை முதல்வர் செயல்படுத்தி உள்ளார்கள். மாணவிகள் இந்த உதவித் தொகையினை முதலீடாக கொண்டு உயர்கல்வி கற்பதற்கும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதற்கும், புத்தகங்கள் வாங்குவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மாணவிகள் கல்லூரிகளில் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், தங்களது தனித்திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். மாணவிகள் அறிவுசார்ந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்நிதியினை பயன்படுத்தி தங்களது கல்வி அறிவையும், தனித்திறமைகளையும் சிறப்பாக வளர்த்து கொண்டால் உங்களின் எதிர்காலம் மிகச்சிறப்பானதாக அமையும். தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையினை தாண்டி, முன்னேறி கொண்டிருக்கின்ற சிறப்பான மாவட்டமாக தருமபுரி மாவட்டம் திகழ்ந்து வருகின்றது. தமிழகத்தில் தற்போது வளர்ச்சியடைந்த மாவட்டங்கள், சிறந்த மாவட்டங்கள் என்ற பெயர் சொல்லக்கூடிய மாவட்டங்களெல்லாம் முன்பு ஒரு காலத்தில் சாதாரண நிலையில் இருந்த மாவட்டங்கள் தான். அங்கு இருக்கக்கூடிய மக்களின் கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து வளர்ச்சிகளும் தொடர்ந்து ஏற்பட்டதன் காரணமாக தான் தற்போது வளர்ச்சியடைந்த மாவட்டங்களாக மாறியுள்ளன.
இதேபோலத் தான் தருமபுரி மாவட்டம் தற்போது வளர்ந்து வருகின்ற மாவட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே தான், கல்வி வளர்ச்சியில் நமது மாவட்டம் சிறந்த மாவட்டமாக உருவாகினால் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மேம்படும் மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவாகும். அதற்காக தான் பெண்கள் உயர்கல்வி கற்பது அவசியம். அந்த உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக தான் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்தகைய திட்டத்தில் பயன்பெறுவதற்கு உயர்கல்வி பயின்று வரும் மாணவிகள் ஏற்கனவே 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்று, தற்போது மருத்துவம், பொறியியல், தொழிற்கல்விகள், பல்வேறு பட்டப்படிப்புகள் பயின்று வருகின்ற மாணவிகள் இன்று முதல் இணைய தளம் வாயிலாக உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தால், தகுதியுள்ள அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- நிதி உதவி வழங்கப்படும்.
எனவே அறிவுச் சார்ந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்நிதியினை பயன்படுத்திக்கொண்டு, தங்களின் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அறிவை வளர்ந்துகொள்வதோடு, தனித்திறன்களையும் வளர்த்து கொண்டால் தான் அனைத்லும் வெற்றி பெற முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். பல்வேறு உயர்பதவிகளில் தற்போது வகித்துகொண்டிருப்பவர்களும், அறிவையும், தனித்திறன்களையும் வளர்த்து கொண்டதால் தான், போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, இப்பதவியை பெற்று உள்ளார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி தான் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சி என்பதை அறிந்து தற்போது உள்ள போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி வெற்றி பெற் தங்களை சிறப்பாக தயார்படுத்தி கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu