சாலையை விரிவாக்கம் கோரி கிராம மக்கள் போராட்டம்

சாலையை விரிவாக்கம் கோரி கிராம மக்கள் போராட்டம்
X

சாலை விரிவாக்கம் செய்யக்கோரி போராட்டம் நடத்திய கிராம மக்கள் 

குறுகிய அளவிலான சாலையை விரிவுபடுத்தப்பட்ட சாலையாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நாகர்கூடல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மூசாகவுண்டன் கொட்டாய் பகுதியில் இருந்து மத்தாளபள்ளம் வழியாக நாகாவதி அணை வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே நடைபெற்று வருகிறது. இப்பகுதி போக்குவரத்து மற்றும் விளை பொருட்கள் சந்தைப்படுத்துவதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய அளவிலான சாலை அமைக்கப்பட்டது. தற்போது விரிவு படுத்தப்பட்ட சாலையாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சாலை பகுதி அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக உள்ளதால் சாலைக்கு தேவையான அகலமான பகுதியை பொதுமக்கள் அரசுக்கு வழங்கும் பட்சத்தில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

இதற்கு அனைத்து பட்டா நில உரிமைதாரரும் ஒப்புக்கொண்ட நிலையில் ஒரு சிலர் மட்டும் ஏற்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக கிராமத்திற்கு செல்லும் சாலையை பள்ளம் தோண்டி துண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த இண்டூர் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், நாகர்கூடல் ஊராட்சி மன்ற தலைவர் குமார், நிர்வாக பொறியாளர், வருவாய் அலுவலர் திலகவதி, ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரும் ஒன்றிணைந்து நிலத்தை கொடுக்கும் பட்சத்தில் தான் அரசு உடனடியாக உங்களுக்கு சாலை அமைக்கும் பணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என தெரிவித்தனர்

இந்த பல மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் அனைத்து பட்டா நில உரிமையாளர்களும் நிலத்தை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டனர். இதனால் பல மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்து சுமூக தீர்வு ஏற்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்