காய்கறிகள் விலை உயர்வு: கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

காய்கறிகள் விலை உயர்வு: கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
X
கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் குறைந்த விலையில் கிடைக்கும் கீரை வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்

தர்மபுரி சுற்று வட்டாரப் பகுதியில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், கேரட் மற்றும் கீரை உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக தக்காளி, பீன்ஸ், இஞ்சி, கத்தரிக் காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்ததுள்ளது. காய்கறிகள் குறைந்த பட்சம் 65 முதல் 80 நாட்களுக்கு பின்னர் மகசூல் கிடைக்கும். கீரை வகைகள் 25 நாட்களில் அறுவடைக்குக் கிடைக்கும்.

இதனால், அண்மைக் காலமாக விவசாயிகள் தண்டுக் கீரை, அரைக் கீரை, வெந்தயக் கீரை, பாலக் கீரை உள்ளிட்ட கீரை வகைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

அறுவடை செய்யப்படும் கீரைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். குறைந்த நாட்களில் வருவாய் பலன் தருவதாலும், சந்தையில் பெரியதாக விலையில் மாற்றம் இருப்பதில்லை என்பதாலும், கீரை சாகுபடி தங்களுக்குக் கைகொடுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் காய்கறி பயிர்களைப் போலக் கீரை வகைகளையும் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். கீரை 25 நாட்களில் அறுவடைக்கு வருவதால், பொருளாதார ரீதியாக எங்களுக்குக் குறுகிய காலத்தில் பலன் கிடைக்கிறது.

கடந்த சில வாரங்களாக தக்காளி, பீன்ஸ், இஞ்சி, கத்தரிக் காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்ததால், குறைந்த விலையில் கிடைக்கும் கீரை வகைகளைப் பொதுமக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். இதனால், கடந்த வாரங்களில் ஒரு கட்டு கீரை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்த நிலையில், தற்போது ரூ.15-க்கு விற்பனையாகிறது.

மேலும், ஆண்டு முழுவதும் கீரையை பொறுத்த வரை விலையில் பெரிய ஏற்ற, இறக்கம் இல்லாததால் எங்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருகிறது என்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil