தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை
மழைக்காலத்தில் முடிந்த வரை வெளியே வராமல் இருப்பதே பெரும் பாதுகாப்பு (கோப்பு படம்)
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், அதியமான்கோட்டை, ஜருகு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாகவும், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்தது.
தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தர்மபுரி-1மி.மீ, பாலக்கோடு-8, மாரண்டஅள்ளி-8, பென்னாகரம்-3, ஒகேனக்கல்-2 என மாவட்டத்தில் மொத்தம் 22. 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மானாவாரி நிலங்களில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ள விவசாயிகள் மழை இன்றி தவித்து நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்ததால் விவசாயிகளும் தங்களது விவசாய பணிகளை தொடங்குவதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்.
கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீச மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கிய இந்த விடிய விடிய பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், லண்டன் பேட்டை, முல்லை நகர், சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
இதேபோன்று கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி அணை பகுதியிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி, பாரூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி, தளி, சின்னார் அணை, கெலவரப்பள்ளி அணை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:
அஞ்செட்டி-3, பாரூர்-6.8, தேன்கனிக்கோட்டை-5.0, ஓசூர்-30.1, கிருஷ்ணகிரி-44, ராயக்கோட்டை-13, சூளகிரி-18, தளி-10, சின்னார் அணை-16, கெலவரப்பள்ளி அணை-37, கே.ஆர்.பி அணை-62.4 என மாவட்டம் முழுவதும் மொத்தம்-245.3 மிமீ பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து வர தொடங்கியது. மேலும், கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணை மற்றும் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu