இளைஞர்கள் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்- முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்
அரூரில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழாவில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க செயலர் சேகர் வரவேற்றார். தீரன் சின்னமலை முழு திருவுருவ வெண்கல சிலையை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டவர் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலையின் வரலாற்று குறிப்புகள் வெளிநாட்டினர் பலர் தங்களின் பயண குறிப்புகளில் குறிப்பிட்டு உள்ளனர். கொங்கு நாட்டின் குறுநில மன்னராக இருந்த தீரன் சின்னமலை ஆட்சியில் அமைதியான வாழ்வும், தொழில், மருத்துவம், வேளாண் பணிகளில் சிறந்து விளங்கியுள்ளது. இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.
வட மாநில மக்கள் கூட கொங்கு மண்டலத்தை நோக்கியே வருகை தருகின்றனர். கொங்கு மண்ணில் ஆதிக்க மனப்பான்மை எப்போதும் இல்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமும் எப்போதும் இல்லை.
வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன். எனவே, கிராமப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நன்றாக படித்து, வேலை வாய்ப்பு களை பெற்று சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என கூறினார்.
சிலை திறப்பு விழா மலரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சின்ராஜ் வெளியிட முதல் பிரதியை கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் தேவராசன் பெற்றுக்கொண்டார்.
விழா தொகுப்பினை தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் சந்திர சேகரன், பொருளர் தங்கராசு ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்த விழாவில் கர்நாடகா மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆணையர் இராமச்சந்திரன், தமிழ்நாடு சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலருமான முத்துசாமி, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் சந்திரசேகர், பெருந்துறை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சென்னியப்பன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் அசோகன், தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu