அரூர் அருகே கிணறு தோண்டும்போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

அரூர் அருகே கிணறு தோண்டும்போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
X

காட்சி படம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கிணறு தோண்டும் போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்பவருடைய விவசாய தோட்டத்தில் கிணறு ஒன்று புதிதாக தோண்டப்பட்டு வந்தது. அதில் டிராக்டர் கம்ப்ரசர் மூலம் கிணறு தோண்டும் பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சின்னசாமி என்பவருடைய மகன் கூலி தொழிலாளி ராஜா, டிராக்டரை இயக்கும் பொழுது முதல் கியரருக்கு பதிலாக ரிவர்ஸ் கியரை தவறுதலாக மாற்றியதில், பின்னாலே சென்ற டிராக்டர் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தொழிலாளி ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது கிணற்றில் இருந்த மற்றொரு தொழிலாளி, டிராக்டர் கிணற்றில் விழுவதை பார்த்து சாமார்த்தியமாக உயிர் தப்பினார். உயிரிழந்த ராஜாவை மேலே இருந்த தொழிலாளர்கள் மீட்டு விபத்து குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு கிணற்றில் விழுந்த டிராக்டர் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த ராஜாவுக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு