வரட்டாறு, வாணியாற்றில் வீணாகும் உபரி நீர்: வறண்ட ஏரிகளை நிரப்ப பாமக வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி.
வரட்டாறு மற்றும் வாணியாறு வழியாக வீணாகும் உபரிநீரை பயன்படுத்தி வறண்டு கிடக்கும் ஏரிகளை நிரப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு உழவர் பேரியிக்க மாநில செயலர் இல.வேலுசாமி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பருவ மழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணைகள் நிரம்பியுள்ளன.
தற்போது, இந்த அணைகளின் பழைய ஆயக்கட்டு கால்வாய்கள் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், வெங்கடசமுத்திரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, ஆலாபுரம், பறையப்பட்டி புதூர், மணவாளன் சாமி ஏரி, கீரைப்பட்டி சின்னேரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன.
ஆனால், வரட்டாறு அணை, வாணியாறு அணைகளின் புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்லக்கூடிய 30க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. பருவ மழையின் காரணமாக ஓரளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், ஏரிகளுக்கு அருகில் உள்ள விவசாயிகள் சிலர் ஏரிகளை நிரப்ப எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
மழைக் காலங்களில் கிடைக்கூடிய மழைநீரை சேமிக்கவில்லை எனில் கோடையில் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே, வள்ளிமதுரை வரட்டாறு அணை, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்தி, வறண்டு கிடக்கும் ஏரிகளை நிரப்ப தருமபுரி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu