அரூர் அரசு மகளிர் பள்ளியில் தேங்கும் சாக்கடை நீர்: டெங்கு பரவும் அபாயம்
தர்மபுரி மாவட்டம் அரூரில்,சேலம் சாலையில் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு அரூர் நகரம் ,கொளகம்பட்டி,பெத்தூர்,அச்சல்வாடி,வேப்பம்பட்டி,பே.தாதம்பட்டி,எல்லபுடையாம்பட்டி, சித்தேரி, வாச்சாத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
தற்போது கொரோனோ விடுமுறை முடிந்து மாணவ மாணவிகளுக்கு பள்ளி திறக்கபட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. பள்ளி வளாகத்தில் மழையால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இது மட்டும் அல்லாமல் பச்சனம்பட்டி செல்லும் சாலை ஓர கழிவுநீர் செல்லும் கால்வாய் அடைக்கபட்டதால் அனைத்து கழிவுநீரும் பள்ளி வளாகத்தில் நுழைந்து மழை நீரோடு கலந்து விட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கழிவுகளில் கால் வைத்து நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
ஒரு வகுப்பறையில் இருந்து அடுத்து வகுப்பறைக்கு செல்ல முடியாமல் மாணவிகளும், ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர் .இந்த கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவிகளை கடிப்பதால் டெங்கு மலேரியா உள்ளிட்ட, மர்ம காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் அதிகளவு டெங்கு பரவி வரும் சூழலில் பள்ளி வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் ,எவ்வித நடவடிக்கையும் இல்லை. பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் வருவதற்குள் கழிவுநீரை பள்ளி வளாகத்தில் இருந்து முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu