புதிய ஜவுளி கடையை திறந்து வைத்த துாய்மை பணியாளர்; அரூரில் நெகிழ்ச்சி சம்பவம்

புதிய ஜவுளி கடையை திறந்து வைத்த துாய்மை பணியாளர்; அரூரில் நெகிழ்ச்சி சம்பவம்
X

தர்மபுரி மாவட்டம், அரூரில் புதிய ஜவுளி கடையை திறந்து வைத்த துப்புரவு பணியாளர் சாந்தி கடையில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அரூரில் தூய்மை பணியாளரை வைத்து புதிய ஜவுளி கடை திறப்பு-கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மரியாதை.

தருமபுரி மாவட்டம் அரூர் பஜார் தெருவில் செந்தில்குமார் என்பவர் புதிதாக ஜவுளிக்கடை தொடங்கினார். இந்த ஜவுளிக் கடைக்கு கொரோனா காலத்தில் தங்களது விலை மதிப்பில்லாத உயிர்களை, துச்சமென கருதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றிவந்த முன் களப் பணியாளர்களுக்கு கௌரவம் அளிக்க வேண்டும் என திட்டமிட்டார்.

இதனை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள கடையினை முக்கிய பிரபலங்களை கொண்டு வந்து திறந்து கடையை விளம்பரத்தை தேடிக் கொள்ளாமல், கொரோனா காலத்தில் அரூர் நகர மக்களை காப்பதற்காக முன்கள பணியாளர்களாக பணியாற்றிய அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களில் ஒருவரான சாந்தி என்பவரை அழைத்து வந்து, கடையை ரிப்பன் வெட்டி திறக்க வைத்தார்.

தொடர்ந்து கடையை திறந்து வைத்த துப்புரவு பணியாளர் சாந்தி கடையில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் அரூர் பேரூராட்சியில் பணிபுரிகின்ற முன்களப் பணியாளர்கள் அனைவரையும் கடைக்கு, அழைத்து அவர்களை கௌரவித்து இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அரூர் பகுதியில் திறக்கப்பட்ட புதிய ஜவுளிக் கடையில் துப்புரவு பணியாளர்களை வைத்து திறக்கப்பட்ட சம்பவம், கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய மரியாதை செய்த கடை உரிமையாளரின் செயல்பாடு, அரூர் பகுதியில் உள்ள மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் மக்களுக்கு தெரிந்த பிரபலங்களை வைத்து கடையை திறப்பதற்கு பதிலாக நமக்காக தினந்தோறும் பணியாற்றி வரும் முன் களப் பணியாளர்களுக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே முன் களப்பணியாளர்கள் வைத்து கடை திறந்ததாக கடையின் உரிமையாளர் நெகிழ்ந்தார். இந்த சம்பவத்தால் அரூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!