அரூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை

அரூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
X

அரூர் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் விவசாய நிலங்களில் சடலங்களை எடுத்துச் செல்லும் கிராம மக்கள்.

அரூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் மயான திற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் யாரேனும் உயிர் இழக்கும் போது இந்த மயானத்திற்கு கொண்டு சென்று சடலத்தை அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்த மயானத்திற்கு செல்வதற்கு ஆரம்ப காலத்தில் சாலைவசதி இருந்து வந்தது. நாளடைவில் அந்த சாலைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் விவசாயம் செய்யுபோது ஒற்றையடிப்பாதை வரை சுருக்கி விவசாயம் செய்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமத்தில் உயிர் இழப்புகள் ஏற்படும் நேரங்களில் சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது, விவசாய நிலங்களின் வழியாகவே எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த நிலங்களில் பயிர் சாகுபடி செய்திருந்தால், கூட ச

டலங்களை எடுத்துச் செல்வதற்கு அந்த நிலத்தின் உரிமையாளர்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். சில நேரங்களில் நெல், மரவள்ளி, ராகி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் நேரத்தில் கூட, கிராம மக்கள் சடலங்களை அந்த வயல்களின் வழியாக எடுத்துச் செல்கின்றனர்.

இதனால் விவசாய பயிர்கள் அந்தப் பகுதியில் சேதம் அடைகிறது. இதற்கிடையில் அங்குள்ள விவசாய நிலங்களில் தற்போது மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து நிற்பதால் தேர்பாடை அமைத்து இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாதாரண பாடை மூலம் சடலத்தை எடுத்துச் செல்வதே சிரமமான காரியமாக உள்ளது.

இனிவரும் நாட்களில் மரங்கள் மேலும் வளர்ந்துவிட்டால் சாதாரண பாடையிலும் கூட சடலத்தை எடுத்துச் செல்ல முடியாது. ஒத்தையடி பாதையாக இருப்பதால், சடலத்தை கொம்பில் கட்டி எடுத்து செல்லும் அவலநிலை ஏற்படும். இந்நிலையில், அந்தக் கிராமத்திலுள்ள கோபால் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை மயானத்துக்கு தேர்பாடை மூலம் எடுத்துச் செல்ல முடியாததால், வாகனத்தில் எடுத்து சென்றனர்.

தொடர்ந்து விவசாய நிலத்தில் செல்ல, சாதாரண பாதை மூலம் எடுத்து செல்லும் போது கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்த மயான பாதை பிரச்சினைக்கு தீர்வு கேட்டு கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என அனைத்து தரப்பினர் இடத்திலும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் பல தலைமுறைகளை கடந்தும் இன்றுவரை இந்த மயானத்திற்கு பாதை வசதி செய்து தரப்படவில்லை. இது போன்ற நிகழ்வுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் தங்கள் கிராமத்தில் உள்ள மயான இடத்தை உரிய முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடத்தையும் மீட்டுத் தர வேண்டும். அதேபோல் மயானத்திற்கு செல்கின்ற பாதையை ஏற்படுத்தி தர வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், தற்போது உள்ள பாதையை, விவசாயிகளிடம் பேசி பெற்று சாலை அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் மீண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு