மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை திட்டம் விரைவில் முடிக்கப்படும்: எம்பி செந்தில்குமார் தகவல்
மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை திட்டம் விரைவில் முடிக்கப்படும் என மொரப்பூரில் தி.மு.க.எம்பி செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
மொரப்பூர்-தருமபுரி இடையேயான ரயில் பாதை திட்டம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ரூ.358 கோடி மதிப்பில் தொடங்கி வைத்தார்.
ஆனால் தொடங்கி வைத்து சிறிது தூரம் மட்டுமே, நிலம் அளவீடு செய்யப்பட்ட நிலையில் திட்டமானது பணி எதுவும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம் குறித்து துறை அதிகாரிகள், மத்திய அமைச்சர் என சந்தித்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் முயற்சிகளை எடுத்து வந்தார்.
இந்நிலையில் மொரப்பூரில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அளவீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், மீதமுள்ள பகுதிகளில் அளவீடு செய்வதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மொரப்பூர் சென்னம்பட்டி அருகே ரயில் பாதைக்கான நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது. இந்த பணியினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி எம்பி செந்தில்குமார்,
மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம், தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு. இதனை கடந்த 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ரூ.358 கோடி மதிப்பில், தருமபுரி வள்ளலார் மைதானத்தில் அடிக்கல் நாட்டினார்.
ஆனால் தற்பொழுது அந்த அடிக்கல் இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை. அதன் பிறகு இந்தத் திட்டத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
மேலும் தருமபுரி நகர் பகுதியில் 8 கிலோமீட்டர் தூரம் கட்டிடங்களும், குடியிருப்புகளும் இருப்பதால், மாற்று வழியும் தேவைப்படுகிறது.
தற்போது அந்த எட்டு கிலோ மீட்டருக்கு மாற்று வழியும் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் பாதைக்கு நிலம் அளவீடு செய்வதற்கான பணியாளர்கள் இல்லாமல் இருந்தது.
வெறும் 10 கிலோ மீட்டர் மட்டுமே அளவீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், மீதமுள்ள இடங்களில் நில அளவீடு செய்ய ஆட்கள் தேவை பட்டது. இதனை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெற்று, தற்போது நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
சுமார் இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, நிலம் அளவீடு, அத்தியவசிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு இந்த திட்டம் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu